மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளைப் பலியிட முயன்றனர். இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி உள்ளிட்டோர் தர்காவுக்குச் சென்றனர். அப்போது நவாஸ்கனியுடன் வந்தவர்கள் மலைப்படிக் கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. தமிழகம் முழுவதுமிருந்து இந்து முன்னணி, பாஜகவினர் திரள திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. மேலும், மதுரை மாவட்ட நிர்வாகம் பிப். 3, 4 ஆகிய 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
வெளியூர்க்காரர்கள் திரள்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும், 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 4ம் தேதியன்று திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு, பழங்காநத்தத்தில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு, திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரி கோஷம் எழுப்பினர். இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆர்எஸ்எஸ் தென் பிராந்திய தலைவர் வன்னிராஜன், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசுகையில், “திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டு வருவோம். அதற்கான முகூர்த்தம் குறிக்கப்பட்டுவிட்டது”என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.