வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு இரவு நேர சிறப்பு ரோந்துப் பணியை வனத் துறையினர் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா வன விலங்கு சரணாலயம் என 3 மாநிலங்களின் பிரபல சரணாலயங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில், உதகை அருகே கேத்தி, ஓவேலி பகுதிகளில் காட்டு மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாகவும், மரக்கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பகுதியில் கடந்த 25-ம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஜம்ஷிர் (37) என்பவர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் வேட்டையை முழுமையாக தடுக்கும் வகையில் சிறப்பு இரவு நேர ரோந்துப் பணியை வனத் துறையினர் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில், வனச்சரகர் சசிகுமார் மேற்பார்வையில் மூன்று மாநிலங்களின் எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியர்கள் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், வனவிலங்கு வேட்டையைத் தடுக்க தமிழகத்திலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு இரவு சிறப்பு ரோந்துப் பணியை வனத் துறை தொடங்கியுள்ளது. தனித்தனியாக 10 குழுக்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்தக் குழுவினர், தனியார் வாகனங்கள் மட்டுமின்றி, அரசுப் பேருந்துகளிலும் சோதனை மேற்கொள்வர்" என்றனர்.