நீர்நிலை புறம்போக்கில் உள்ள மதுரை திமுக அலுவலகத்தை இடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: மதுரையில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதாக திமுக அலுவலகத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பீபீ குளம் பகுதி திமுக நிர்வாகி ரவீந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: மதுரை மாநகர் பி.பி.குளம் கண்மாயை ஒட்டி முல்லை நகர் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக் கின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சார்பிலும் வீடுகள் வழங்கப்பட்டு அதில் மக்கள் வசிக்கின்றனர். பி.பி.குளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை பீ.பீ.குளத்தில் திமுக கட்சி அலுவலகம் 30 ஆண்டுக்கு மேலாக உள்ளது. அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது. மாநகராட்சிக்கு முறையாக தற்போது வரை வரி செலுத்தப்படுகிறது. திமுக அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறி இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி இடத்தில் தான் அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் திமுக கட்சி அலுவலக கட்டிடத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திமுக அலுவலகத்தை இடித்துவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நீதிமன்ற உத்தரவின் படி திமுக அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், "அந்தக் கட்டிடத்தில் எந்த செயல்பாடுகளும் இல்லை. கட்சி அலுவலகம் காலி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கட்சி அலுவலகத்தை தாங்களே இடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்த நிலையில், இதுவரை கட்டிடத்தை இடிக்காமல், கட்டிடத்தை காலி செய்வதாக கூறுவது ஏன்? எனவே, உடனடியாக கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

x