சென்னை: தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலை உருவாக்கியிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளி மாணவி ஒருவரை பள்ளியில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று ஆசிரியர்கள், என ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
அதைப் போலவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த வேதனையை தருகிறது.
கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், குற்றச் சம்பவங்களும் அதிகமாக அரங்கேறும் மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், பெண் காவலர்கள் என ஒட்டுமொத்த பெண்களும் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது இந்த திராவிட மாடல் அரசு என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, இரவு நேரங்களில் போதுமான காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களோடு, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.