திருப்பரங்குன்றம் மலையை காக்க நடந்தது முதல்கட்ட போராட்டம்தான்: இந்து முன்னணி தலைவர் பேச்சு


மதுரை: திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்ற நடந்தது முதல்கட்டப் போராட்டம்தான் என, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்பிரமணியன் கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதியின் பேரில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்க மதுரை வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்பிரமணியம் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து முன்னணி மற்றும் பல்வேறு சமூக தலைவர்கள், முருக பக்தர்கள் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காவி கலரில் கையிறு கட்டியவர்களை தேடி தேடி கைது செய்தனர். உயர் நீதிமன்றத்தை அணுகினோம். நீதிபதிக்கு எங்களது நன்றி. பெரிய எழுச்சியோடு ஆர்ப் பாட்டம் நடந்து முடிந்துள்ளது.

முருகன் மலையைக் காப்பாற்ற இது முதல்கட்டப் போராட்டம். இது அரசுக்கு விழுந்த முதல் அடி. நாங்கள் அறப்போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். கோரிப்பாளையம் பகுதியில் சிக்கந்தருக்கு சமாதி உள்ளது என கூறுகின்றனர். முருகன் மலையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கூடியிருக்கின்றனர். திமுக முருகன் மாநாடு நடத்தியது அரசியல். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x