மதுரை: திருப்பரங்குன்றம் ஆர்ப் பாட்டத்தை முறியடிக்க, பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நள்ளிரவில் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி, இந்து முன்னணி அமைப்பு சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டு, பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட் டத்துக்கு, இந்துக்கள் திரண்டு வருமாறு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் புறப்படத் தயாராகினர். இதைத் தடுக்க, திருப்பரங்குன்றத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்களை திரட்டிக்கொண்டு வரும் பட்டியலில் இருந்த பாஜக மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளை, போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யத் தொடங்கினர். இதற்காக, போலீஸார் ஒவ்வொரு குழுவாக பாஜக, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பல நிர் வாகிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில பாஜக அரசு தொடர்புத் துறை தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், சதீஷ்குமார், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டனர்.
மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதையொட்டி, மதுரைக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டு, வாகனங்களில் செல்வோரை கண்காணித்தனர். வாகனங்களில் கூட்டமாகச் செல்வோர் மற்றும் பச்சை, நீலம், காவி நிறங்களில் வேட்டி, துண்டு அணிந்து சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குறித்துக்கொண்டு அனுப்பி வைத்தனர்.