சென்னை: சுப முகூர்த்த நாளான பிப்ரவரி 2ம் தேதி அன்று பத்திரப் பதிவு செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு அதைக் கூட நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறமையற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு ஒரு மோசமான, நிர்வாகத் திறமையற்ற, ஒருங்கிணைப்பு இல்லாத, உரிமைகளை தாரை வார்க்கிற, ஒரு வெத்துவேட்டு அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக வீடு விற்பனை, திருமணப் பதிவு உள்ளிட்டவற்றை நல்ல முகூர்த்த நாளில் பதிவு செய்வதை பொதுமக்கள் விரும்புவார்கள்.
இதன் அடிப்படையில், பிப்ரவரி 2ம் தேதி அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், சுபமுகூர்த்த நாளாக இருந்ததன் காரணமாக, அன்று சார் பதிவாளர் அலுவலங்கள் செயல்படும் என்று திமுக அரசு அறிவித்தது. திமுக அரசின் இந்த அறிவிப்பினை நம்பி, ஏராளமானோர் சார் பதிவாளர் அலுவலங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால், பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்கள் அரசு அறிவித்தபடி இயங்காததன் காரணமாக, பத்திரப் பதிவு செய்ய முடியாமல், ஒருவித அதிருப்தியுடன், ஏமாற்றத்தோடு வீடு திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 2ம் தேதி அன்று பத்திரப் பதிவு அலுவலகம் செயல்படும் என்ற அறிவிப்பு உயர் அதிகாரிகளால் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது என்றும், சார் பதிவாளர் அமைப்பிடம் இது குறித்து கருத்து கேட்கப்படவில்லை என்றும், பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர் என்றும், போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், சில சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததன் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் திறக்கப்படவில்லை என்றும் சார் பதிவாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
பணிக்கு வராதவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தத்தில், உயர் அதிகாரிகளுக்கும், சார் பதிவாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், பிப்ரவரி 2ம் தேதி அன்று பத்திரப் பதிவு நடைபெறும் என்ற அறிவிப்பினை முன் கூட்டியே அறிவிக்காததும் தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு துறைக்குள்ளேயே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தாதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களே.
நேற்று பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்கு இரட்டிப்புச் செலவினை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, நல்ல நாளில் பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியவில்லையே என்ற மன உளைச்சலையும் திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய அறிவிப்பினைக் கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஒரு செயலை செய்ய திட்டமிட்டால் மட்டும் போதாது. திட்டமிட்டதற்கு ஏற்ப அதனைச் செயல்படுத்திட வேண்டும். இதுதான் அரசின் நிர்வாகத் திறன். ஆனால், திமுக அரசோ நிர்வாகத் திறனற்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
"மன உறுதி எனப்படுவது ஒரு செயலைச் செய்து முடிப்பது என்ற உறுதியே. மற்றவையெல்லாம் வேறு வகையானவை" என்கிறார் திருவள்ளுவர். இதனை மனதில் நிலை நிறுத்தி, இனி வருங்காலங்களிலாவது எந்தச் செயலையும் மன உறுதியுடன் செய்திட திமுக அரசு முன்வர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.