தமிழகத்தில் இன்று வழக்கத்தைவிட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை 21 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி்ல் நேற்று காலை மிதமான, அடர்ந்த பனிமூட்டம் நிலவியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.