ராஜபாளையம்: ரயில்வே நீர்வழி பாலத்தில் வேலி போட்டு அடைத்ததால் வாகன ஓட்டிகள் சிரமம்!


ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கணபதியாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நீர் வழிப்பாதைக்காக அமைக்கப்பட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், வாகனங்கள் செல்லாதவாறு ரயில்வே மற்றும் தனியார் வேலி போட்டு அடைத்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையத்தில் இங்குள்ள பி.எஸ்.கே.நகர், அண்ணா நகர், நரிமேடு, ஆசிரியர் காலனி உள்ளிட்ட நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் சங்கரன்கோவில் சாலை செல்வதற்காக கணபதியாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நீர்வழிப்பாதைக்காக அமைக்கப்பட்ட சிறிய பாலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். அதேபோல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரப்பட்டி சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளுக்கு செல்வதற்கும் இந்த வழியை பயன்படுத்தி வந்தனர். ரயில்வே மேம்பால பணி நடந்த 4 ஆண்டுகளும் கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு இந்த வழியையே பிரதான மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் நீர்வழி பாலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டும் அணுகு சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் முழுமையாக இடம் தர மறுப்பதால் சுரங்கப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ராஜபாளையம் கிழக்கு பகுதியில் இருந்து, தெற்கு பகுதிக்கு செல்ல கணபதியாபுரம் ரயில் பாலத்தை மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்தப் பாலத்தின் அருகே வாகனங்கள் செல்ல முடியாதவாறு தனியார் இடத்தில் வேலி அமைத்தும், ரயில்வே இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் சுரங்கப்பாதை செயல்பாட்டிற்கு வரும்வரை இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கணபதியாபுரம் ரயில் பாலத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x