புதுச்சேரி: தனது ஆன்மீக குருவுக்கு வீட்டருகே கோரிமேட்டில் கட்டியுள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் இன்று நடந்த குருபூஜை நிகழ்வில் பூஜை செய்து அன்னதானத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
சேலம் சூரமங்கலத்தில் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இங்கு 25ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடந்தது. ஸ்ரீ சத்குரு அப்பா பைத்திய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுவை முதல்வர் தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிக்கு கோரிமேட்டில் தனது வீட்டருகே கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் குரு பூஜை விழா இன்று நடந்தது. காலை 7.30 மணிக்கு திருவிளக்கு, புனிதநீர், ஐங்கரன் வழிபாடு நடந்தது. 8 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிக்கு தமிழில் வேள்வி வழிபாடு நடந்தது.
காலை 9.30 மணிக்கு பேரொளி வழிபாடும், 10.30 மணிக்கு திருமஞ்சனம், திருக்குட நன்னீராட்டும் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு பேரொளி வழிபாடும், 12.15 மணிக்கு அன்னதானமும் நடந்தது. குரு பூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் செல்வம், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் எம்எல்ஏக்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்.