இலங்கை மீது  வழக்கு தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: புதுச்சேரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 


படங்கள் எம். சாம்ராஜ்

புதுச்சேரி: இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி புதுச்சேரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதலை கண்டித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து மீனவர் கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். அமைப்பின் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் தலைமை வகித்தார். மலையாளத்தான், தணிகாசலம், சக்திவேல் ஒருங்கிணைத்தனர்.

போராட்டம் தொடர்பாக மங்கையர் செல்வன் கூறுகையில், "காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி கொடுந்தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுடன் அரசியல் உறவுகளை மத்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும். இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

மத்திய அரசை இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தி தமிழக, புதுவை சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை ராணுவ படையின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள தமிழகம், புதுவை மீனவர்களுக்கு ஆயுத பயிற்சியும், ஆயுதமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினோம்" என்றனர். போராட்டத்தில் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பங்கேற்ற பெண்கள் கண்ணீர் சிந்தினர்.

x