பெண் ஏடிஜிபி விவகாரத்தின் பின்னணி என்ன?: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐ.ஜியாக பணியாற்றினார். அப்போது, ஜூலை 28-ம் தேதி அவரது அலுவலக அறையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து எழும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதுஒருபுறம் இருக்க, அப்போது, கல்பனா நாயக், ‘தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘தனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதி திட்டம் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த சதி திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதி திட்டம் நடந்து இருக்கலாம் என்று தான் கருதுவதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து, தமிழக அரசுக்கு எதிரான கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டி.ஜி.பி சங்கர் ஜிவால், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித் திட்டம் காரணம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
‘ஏடிஜிபி உயிருக்கே ஆபத்து!’ - இபிஎஸ் கண்டனம்: ஊழல்களைச் சொன்னதற்காக காவல் துறை ஏடிஜிபியையே கொலை செய்ய முயற்சி நடந்துள்ள நிலையில், “மக்கள் எப்படி தங்களது குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?” என அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னைக் கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல் துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்’ என்ற அவரின் கூற்று நெஞ்சை பதறச் செய்கிறது.
ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள். இத்தகைய ஆட்சியில் மக்கள் எப்படி தங்களது குறைகளை தைரியமாகச் சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது காவல்துறை மேல் விழுந்த பெரும் கரும்புள்ளி. இதற்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்: “விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் சுட்டிக்காட்டியதற்கு பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மவுனமாக்கவே பயன்படுத்தப்படுகிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணை தேவை - ராமதாஸ்: “காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஒரு ஏடிஜிபியே கூறியிருப்பது ஐயத்தை அதிகரிக்கிறது. இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். படுகொலை செய்ய சதி நடந்ததாக ஏடிஜிபி கூறியது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது: எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் தமிழக மீனவர்கள் 10 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்.8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: “மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப்ரவரி 8-ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்” என்று திமுக அறிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 8-ம் தேதி நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையம், அரிசி கடையின் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“பிரதமர் முயற்சித்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி”: “பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முயற்சி செய்தார். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினார். ‘மேக் இன் இந்தியா’ தோல்வியால் இந்தியாவுக்குள் சீனா நுழைந்தது" என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
கும்பமேளா கூட்ட நெரிசல் - பொதுநல மனு நிராகரிப்பு: மகா கும்பமேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது துரதிருஷ்டமானது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை நிராகரித்துள்ளது. மேலும், மனுதாரர் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், “ஏற்கெனவே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நீதி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ‘அலர்ட்’: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்த உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழைய முடியாத வகையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி தாக்கலான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
அதேவேளையில், திருப்பரங்குன்றத்தைக் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா என்றும், தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.