உதகை: நீலகிரி மாவட்டம், உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான அரசு ரோஜா பூங்காவுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 9 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அனைத்து வகையாக ரோஜாக்களை கண்டு மகிழ்கின்றனர்.
இங்கு 4201 ரோஜா ரகங்களில் சுமார் 32,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உயிரியல் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் 2024-ம் ஆண்டு புதிதாக 100 ரோஜா ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் ரோஜா காட்சி வருடந்தோறும் மே மாதத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று உதகை ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்தே ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். எதிர்வரும் 20வது ரோஜா காட்சிக்காக சுமார் 2.5 லட்சம் மலர்நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பார்வையாளர்களை கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதனை கண்டுகளிக்க உள்ளுர் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் முகமது பைசல், ஜெயந்தி பிரேம்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.