சென்னை: உலகில் உள்ள அனைத்து சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் தி.மு.க-வினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் தி.மு.க-வினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட
வெளிச்சமாகி உள்ளது.
குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் தி.மு.க-வினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.
டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. கொடி லைசன்ஸ் என்பதை ஒப்புக்கொண்ட போலீஸ்; திமுக அரசின் போலீஸ். தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து நள்ளிரவில் பெண்களை மிரட்டியவரிடம், வற்புறுத்தி அவருடைய உறவினர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரோடு
தொடர்புடையவர்கள் என்று வாக்குமூலம் வாங்குவதும்; சட்டத்திற்குப் புறம்பாக தங்கள் குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதும், அதை வைத்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு சவால் விடுவதை
சட்ட மந்திரி ரகுபதி ஒரு அடிமைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் வாழ்வும், வளமும் பெற்று, தன்னுடைய சுகபோகத்திற்காக வாழ்வளித்த கட்சியை மறந்துவிட்டு, தி.மு.க-வில் அண்டிப் பிழைக்கும் ரகுபதி போன்றவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறைகூற எந்த அருகதையும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. உடன்பிறப்பை, தி.மு.க. அனுதாபி என்று சொல்லி, முக்கிய குற்றவாளியான "யார் அந்த சார்" என்பவரை
காப்பாற்றத் துடிக்கும் கபட வேடதாரியை தலைமையாகக் கொண்ட கட்சி தி.மு.க.
நாடக கும்பலின் துணை நடிகர்களான ரகுபதி, பாரதி போன்றவர்கள் வாய் வீரம் காட்டுவதை நிறுத்துவது, அவர்களுடைய தலைமைக்கு நல்லது. இல்லையெனில் குட்டி குரைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இன்றுவரை தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கத் தயங்காத இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்