வடசென்னை அனல் மின்நிலையம் மின்னுற்பத்தி தொடங்காதது ஏன்? தனியாரிடம் லாபம் பெறவா? - அன்புமணி கேள்வி


சென்னை: ஓராண்டாகியும் வடசென்னை அனல் மின்நிலையம் மின்னுற்பத்தியை தொடங்கவில்லை. தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தாமதம் செய்யப்படுகிறதா என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.10,158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல் மின்நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை. மின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசுக்கு ஆர்வமில்லை; தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதில் தான் ஆர்வம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

வடசென்னை அனல் மின் நிலையம்-3 கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், மார்ச் 7ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவசரம் அவசரமாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுவாக அனல் மின் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு சில வாரங்களில் வணிக ரீதியிலான மின்சார உற்பத்தியை தொடங்குவது வழக்கம். ஆனால், வடசென்னை அதி உய்ய அனல் மின் நிலையம் 3 திறக்கப்பட்டு ஓராண்டாகியும் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்படாததற்கு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்பட்டால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க முடியாது என ஆட்சியாளர்கள் கருதுவது தான். அதனால் தான் பெயரளவில் தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையம் 3 இல் இப்போது வரை வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தி தொடங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது.

ஒரு மின்நிலையம் தொடர்ந்து 3 நாட்களுக்காவது, அதாவது குறைந்தது 72 மணி நேரத்திற்கு அதன் முழுத் திறனில் இயங்கினால் தான் அது செயல்பாட்டுக்கு வந்ததாக பொருள் ஆகும். ஆனால், 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் நிலையம்- 3 இன்று வரை ஒருமுறை கூட 72 மணி நேரம் அதன் முழுத்திறனில் இயங்கவில்லை. அதனால் தான் வடசென்னை அனல் மின்நிலையத்தால் வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தியைத் தொடங்க முடியவில்லை. வட சென்னை அனல் மின்நிலையம் கடந்த 11 மாதங்களில் இயல்பாக இயங்கியிருந்தால் 1200 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால், 100 கோடி யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை மட்டுமே வடசென்னை அனல் மின்நிலையம் உற்பத்தி செய்திருக்கிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தின் தோல்விக்கு இதை விட சான்று தேவையில்லை.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை கையாள்வதற்கான தளம், நிலக்கரியை மின்நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான கன்வேயர் பெல்ட், எரிக்கப்பட்ட நிலக்கரியின் சாம்பல் வெளியில் பரவாமல் தடுப்பதற்கான சேமிப்புக்குளம் ஆகியவை கட்டமைக்கப்படாதது தான் அங்கு மின்னுற்பத்தி தொடங்கப்படாததற்கான முதன்மைக் காரணம் ஆகும். இந்தக் குறைகளை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும் இவற்றை சுட்டிக்காட்டிய நான், இவற்றை சரி செய்து விரைவாக மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அதன்பின் 5 மாதங்களாகி விட்ட நிலையில் இன்று வரை அந்தக் குறைகள் சரி செய்யப்படவில்லை. குறைகளை களைவதற்காக ரூ.50 கோடி தேவைப்படுவதாகவும், அந்த நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் அனல் மின்நிலையத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்குவதில் அரசு திட்டமிட்டே தாமதம் செய்வதாகத் தோன்றுகிறது.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் வணிக அடிப்படையில் மின்னுற்பத்தியைத் தொடங்குவதை விட, நாடகங்களை நடத்துவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது. வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பாட்டுக்கு வருவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தைச் சுட்டிக்காட்டி கடந்த நவம்பர் 29ஆம் நாள் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்கும் வகையில், திசம்பர் 7ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வட சென்னை அனல்மின் நிலையம் வணிக ரீதியில் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டதா? என்பது குறித்து எந்த பதிலையும் தெரிவிக்காமல், ஜூலை 27ஆம் தேதி 800 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனை எட்டி விட்டதாக மழுப்பலான பதிலைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, வடசென்னை அனல் மின்நிலையப் பணிகள் குறித்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டிசம்பர் மாதத்திற்குள் அந்த மின் நிலையத்தில் வணிக ரீதியிலான மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தார். ஆனால், திசம்பர் முடிந்து பிப்ரவரி மாதமும் வந்து விட்ட நிலையில், இன்னும் வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்பட வில்லை. வட சென்னை அனல் மின்நிலையத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்க இன்னும் ரூ.50 கோடி தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஒதுக்கீடு செய்யாமல் வணிகரீதியிலான மின்சார உற்பத்தியை எவ்வாறு தொடங்க முடியும் என்று தெரியவில்லை. ஒருபுறம் மின்னுற்பத்தியைத் தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையிடுவது, இன்னொருபுறம் பணிகளை முடிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் தாமதப்படுத்துவது என தமிழக அரசு நாடகங்களைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறது.

வடசென்னை அனல் மின்நிலையம் சரியான நேரத்தில் வணிகரீதியிலான மின்னுற்பத்தியைத் தொடங்கி இருந்தால், இதுவரை 1200 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கக் கூடும். அதன் மூலம் அதே அளவு மின்சாரம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதை தவிர்த்திருக்கலாம். அதனால், ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மிச்சமாவதாக வைத்துக் கொண்டால் கூட, 11 மாதங்களில் ரூ.2400 கோடி, ஆண்டுக்கு ரூ.2618 கோடி மிச்சமாகியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு பணம் மிச்சமாவதால் ஆட்சியாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை; தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் மட்டும் தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் தான் மின்னுற்பத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர் என்று புகார்கள் எழுகின்றன. அவற்றை ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்குத் தான் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மின்சாரக் கட்டணத்தை எவ்வளவு தான் உயர்த்தினாலும், மின்வாரியத்தில் நிலவும் ஊழல்கள், நிர்வாகக் குளறுபடிகளைக் களையாமல் வாரியத்தை இலாபத்தில் இயக்க முடியாது. மின் திட்டங்களை செயல்படுத்தி, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தால் மட்டும் தான் இலாபத்தில் நடத்துவது சாத்தியமாகும். இதை உணர்ந்து வடசென்னை அனல் மின் நிலையத்தில் வணிகரீதியிலான மின்னுற்பத்தியைத் தொடங்கவும், நிலுவையில் உள்ள பிற மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

x