தமிழகத்தில் பிப். 8 வரை வறண்ட வானிலை


தமிழகத்தி்ல இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் வரும் 6-ம் தேதி வரை பலத்த காற்று எச்சரிக்கை ஏதுமில்லை.

பிப். 2-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், விருதாச்சலம், கொத்தவாச்சேரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை நிலவரப்படி, மலைப் பகுதிகளான கொடைக்கானலில் 7.6 டிகிரி, உதகையில் 10.6 டிகிரி, வால்பாறையில் 10 டிகிரி, குன்னூரில் 12.5 டிகிரி செல்சியஸும், நிலப் பகுதிகளான திருப்பத்தூரில் 19.8 டிகிரி, கரூர் பரமத்தியில் 20 டிகிரி, வேலூரில் 21.5 டிகிரி, திருத்தணியில் 21.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x