புதுச்சேரி ஆரோவில்லில் பாரம்பரிய சிறுதானிய திருவிழா: ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள், ஆர்வலர்கள்


புதுச்சேரி: ஆரோவில் இசை அம்பலம் பள்ளி நடத்திய பாரம்பரிய விதை, காய்கறி மற்றும் சிறுதானிய திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு, விவசாயிகள், நிலைத்தன்மை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருவிழா ஆரோவில் அறக்கட்டளை, இசை அம்பலம் பள்ளி, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்த திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. கண்காட்சிக் கூடங்களை அமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், பங்கேற்பாளர்களை வரவேற்றல் போன்ற பணிகளில் மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இன்றைய நிகழ்வில், ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது கைகளால் டெரகோட்டா விநாயகர் உருவம் உருவாக்கியது அனைவரையும் மகிழ்வித்தது. மேலும், அவர் தனது சக மாணவர்களுக்கும் இதை செய்ய கற்றுக்கொடுத்தார்,

இந்த நிகழ்வு, பொதுமக்களுக்கு நாம் தினமும் உண்ணும் உணவுகள், அவற்றின் வகைகள், தோற்றம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது. இதுபற்றி ஏற்பாடு செய்திருந்தோர் கூறுகையில், "பல்வேறு வகையான காய்கறிகள், சிறுதானியங்கள், அரிசி வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. விவசாயிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், முழுவதுமாக மரம் மற்றும் செடிகளில் இருந்து கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் உருவாக்கி, மக்களை இயற்கை முறையில் வாழ்வதற்கான பயிற்சியை வழங்கினோம்.

சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் நோக்குடன் வழங்கப்பட்டன. நிகழ்வில் பாரம்பரிய விதைகள் விற்பனைக்காக வழங்கப்பட்டன. மக்களுக்கு தங்கள் சொந்த வீட்டுத் தோட்டங்களில் மாடித் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.

விவசாயிகள் சந்தையும்அமைக்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு பெற்றனர். இதன் மூலம் அவர்கள் இந்திய பாரம்பரிய விதைகள், காய்கறிகள் மற்றும் அவற்றின் பல்வேறு வகைகள் பற்றிய தகவல்களையும் மக்களுக்கு வழங்கினர். மற்றொரு சிறப்பு அம்சமாக, உணவு கடைகள் அமைக்கப்பட்டு, மக்கள் மூலிகை தேநீர், சிறுதானிய ஐஸ்கிரீம், இயற்கை ஸ்நாக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டனர்." என்றனர்.

இந்நிகழ்வில் இசை அம்பலம் பள்ளி மற்றும் ஆரோவில் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய கலைகள் மற்றும் போர்ப்பயிற்சிகளை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர். அதில் சிலம்பாட்டம், கொல்லாட்டம், தமிழ் மரபு போர் கலைகள் மற்றும் பரதம் இடம் பெற்றன. பங்கேற்றோர் கூறுகையில், "இந்த நிகழ்வுகள் மூலம் உணவுப் பழக்க வழக்கங்கள், விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் பசுமை வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் நன்மைகளை புரிந்து கொள்ள வழிவகுத்தது. உணவு பற்றிய புரிதலை வளர்த்தது மட்டுமல்லாது, பாரம்பரிய மற்றும் பசுமை வாழ்வியல் முறைகளை முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது" என்றனர்.

x