ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எம்.மஹாலில் திமுக சார்பில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வரவேற்புரையாற்றினார். பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதலல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ''ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் இயற்கையாகவே வீரமிக்கவர்கள். ராமநாதபுரம் மாவட்டம் அதிகளவில் கபடி வீரர்களை உருவாக்கி உள்ளது.
தமிழக கபடி வீரர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். கபடி விளையாட்டு வீரர்களுக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் 900 ராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கபடி வீரர்களுக்கு காப்பீடு செலுத்தியதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக திகழ்கிறது. விரைவில் மாநிலம் முழுவதும் கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். அது போல ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட பிற விளையாட்டு வீரர்களுக்கும் காப்பீடு திட்டம் துவங்கப்படும்.
கபடி விளையாட்டு ஒரு குழு விளையாட்டு போட்டி ஆகும், இதில் வீரர்கள் மனநிலை ஒரே மாதிரியாக ஒத்து இருந்தால் தான் அந்த அணி வெற்றி பெற முடியும், எனவே கபடி அணி வீரர்கள் போல், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஒரே சிந்தனையுடன், வெற்றி இலக்கோடு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், பொதுமக்களிடையே அரசின் திட்டங்களை எடுத்துச்செல்ல வேண்டும்'' என்றார்.