சென்னை வியாசர்பாடியில் ஏபிவிபி 30-வது மாநில மாநாடு தொடக்கம்


படம்: ம.பிரபு

சென்னை: ஏபிவிபி வட தமிழக அளவிலான 2 நாள் மாநில மாநாடு சென்னை வியாசர்பாடியில் நேற்று தொடங்கியது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) வட தமிழக அளவிலான 30-வது மாநில மாநாடு சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கிவைத்தார்.

இதில், ஏபிவிபி தேசிய இணை அமைப்பு செயலாளர் கோவிந்த் குமார் நாயக் பேசியதாவது: ”உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும், தேசியக்கவி பாரதியாரும் பிறந்த தமிழகத்துக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. சுவாமி விவேகானந்தர் கடந்த 1892ம் ஆண்டு 3 நாட்கள் தவமிருந்து ஞானம் பெற்றதும் தமிழகத்தில் தான். இத்தகைய சிறப்பு மிக்க தமிழகத்தில் ஏபிவிபியின் வட தமிழக அளவிலான 30-வது மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய அளவில் 57 லட்சம் உறுப்பினர்களுடன் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக ஏபிவிபி திகழ்கிறது. நாடு முழுவதும் பரந்த அளவில் கிளைகளை கொண்டுள்ள அமைப்பும் இதுதான். மாணவர் நலன், இளைஞர்கள் மேம்பாடு, அதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புதலை முக்கிய நோக்கமாக கொண்டு ஏபிவிபி செயல்பட்டு வருகிறது” என்று கோவிந்த் குமார் நாயக் பேசினார்.

ஐசரி கணேஷ் பேசும்போது, ”மாணவ பருவம் என்றும் பசுமையானது. அதனால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மாணவனாகவே இருந்து வருகிறேன். தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை மாணவ பருவத்திலேயே முடிவு செய்யுங்கள். அதற்கு தேவையான உழைப்பை செலுத்தினால் கட்டாயம் சாதிக்க முடியும்” என்றார்.

வட தமிழக ஏபிவிபி தலைவர் மோகன் ராஜ், செயலாளர் யுவராஜ் தாமோதரன், மாநில செயற்குழு உறுப்பினர் காவியா மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாநாடு இன்றும் நடைபெறுகிறது.

x