மத்திய பட்ஜெட் எப்படி? - தொழில் துறையினர் வரவேற்பும், விவசாயிகள் கவலையும்


திருப்பூர்: நாட்டின் 20205-2026ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று நிலையில், விவசாயிகள் ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளனர்.

கே.எம்.சுப்பிரமணியன் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்):

ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் பயன்தரும் திட்டம். பிணையின்றி வழங்கப்படும் கடனை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும், ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் உயர்த்தியிருப்பது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பயன் தரும். பெண் தொழில்முனைவோர்களுக்கு பிணையின்றி கடன் வழங்குவது, ஆண்டு வர்த்தகத்தை கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அடிப்படை கடன் விகிதம் அதிகப்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம்.

காட்டன் மிஷன் மூலமாக அதிக மகசூல் பருத்தி உற்பத்தியை கொண்டு, 5 ஆண்டு திட்டம் கொண்டு வருவதால் திருப்பூரில் 80 சதவீதம் காட்டன் உற்பத்தியை பயன்படுத்தும் நிறுவனங்கள் பயன்தரும். பின்னலாடை தொழிலாளர்களின் தொழில் திறனை வளர்த்தெடுக்கும் வகையில், திருப்பூரில் தொழில் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்" என்றார்.

ஏ.சக்திவேல் (ஏஇபிசி அகில இந்திய துணைத் தலைவர்):

தொலைநோக்கு கொண்ட முற்போக்கான பட்ஜெட் இது. எதிர்கால வளர்ச்சியைக் கொண்டு, வலுவான இந்தியாவை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி சார்ந்த மற்றும் உள்கட்டமைப்பு, முதலீடு, பசுமை வளர்ச்சி மற்றும் இந்தியாவின் துடிப்பான மற்றும் சமமான பொருளாதார எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துகிறது.

ஏ.சி.ஈஸ்வரன் (சைமா சங்கத் தலைவர்):

மத்திய நிதிநிலை அறிக்கையில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதை, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது. ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 5 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, விவசாயம் மற்றும் ஜவுளித்தொழில் துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலமாக பருத்தி விளைச்சல் அதிகரிக்கும். இது, எதிர்காலத்தில் ஜவுளித் துறையினருக்கு முதுகெலும்பாக விளங்கும்.

பருத்தி நூல் தட்டுப்பாடான்றி, சீரான விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ‘கிஷான் கிரடிட்’ திட்டத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வியாபாரம் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறு, குறு, நடுத்தரத்தொழில்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.10 கோடி வரை கடன் உத்தரவாதம், கிரெடிட் கார்டு, ‘ஸ்டார்ட்அப்’களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு ஆகியவற்றை வரவேற்கிறோம்.

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர்):

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.50.65 லட்சம் கோடி. இதில் வேளாண்மைக்கு 1,71,437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த நிதிநிலை அறிக்கையில், கடந்த 2020-21-ம் ஆண்டு 5.2 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து, இந்த ஆண்டு 3.4 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.10,218 ஆக இருந்தது. இன்று வரை அதே நிலைமைதான் தொடர்கிறது. உரங்கள், இயந்திரங்களின் வாடகை, வட்டி, ஆள் கூலி ஆகியவை பல மடங்கு உயர்ந்தபோதும், விவசாயிகள் வருமானம் உயரவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்பதை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்பது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்கள், உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்வோம் என்ற வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை.

சுப்பிரமணியம் (அத்திக்கடவு - அவிநாசி போராட்டக் குழு):

ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். உளுந்து, பருப்பு வகைகள் தன்னிறைவு அடைய செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கிஷான் கிரெடிட் கார்டு ரூ.3 லட்சத்தை, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டும்.

எஸ்.ஆர்.மதுசூதனன் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாவட்ட தலைவர்):

திருப்பூர் மாவட்டம் மற்றும் 20 மாநிலங்களில் வெள்ளை ஈ தாக்குதல் உட்பட நோய் தாக்குதலால் காய்ப்பு இழந்து தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க மத்திய அரசின் நிறுவனமான தென்னை வளர்ச்சி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை.

x