நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பாசன குளங்களில் 71 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு


திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நீராதாரங்களான பாசன குளங்களில் 71 இனங்களை சேர்ந்த 23,753 பறவைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்ங்களிலும் 15-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் குறித்து தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் கூறியதாவது:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பாசனக் குளங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கைச் சங்கம், முத்து நகர் இயற்கைக் கழகம், எக்கோ ஜெசுயிட்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கணக்கெடுப்பினை நடத்தின. 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 9 குழுக்களாக பிரிந்து 68 குளங்களில் கணக்கெடுப்பை மேற்கொண்டார்கள்.

இதில் மொத்தம் 71 இனங்களை சேர்ந்த 23,753 பறவைகள் பதிவாகின. மிக அதிக அளவில் காணப்பட்ட பறவை இனங்களில் உண்ணிக் கொக்கு (3,495), சிறிய நீர்க்காகம் (2,150), தைலான் குருவி (1,511), சிறு அன்றில் (1, 185) மற்றும் மீசை ஆலா (967) ஆகியவை அடங்கும். வலசை வரும் வாத்தினங்களான ஊசி வால் வாத்து, நீலச்சிறகு வாத்து, தட்டை வாயன், வரித்தலை வாத்து போன்ற பறவைகளும் கணக்கெடுப்பில் பதிவாகின.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பகுளத்தில் அதிகளவாக 3,724 பறவைகள் பதிவாகின. திருநெல்வேலி கங்கைகொண்டான் குளத்தில் 1, 246 பறவைகள் பதிவாகின. கங்கைகொண்டான், அருந்தவபட்டி மற்றும் மேலப்பாவூர் ஆகிய குளங்களில் கருநதலை அன்றில், நீர்க்காகம், சாம்பல் நாரை, பாம்புத்தாரா இனப் பறவைகள் இனப்பெருக்கம் செய்ததும் பதிவாகி உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் வேய்ந்தான்குளத்தில் புள்ளிமூக்கு தாரா குஞ்சுகளுடன் காணப்பட்டது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள வகைகுளத்தில் பறவைகள் இனப்பெருக்கம் செய்யாதது கவலையை ஏற்படுத்தியது. நூற்றுக் கணக்கான கருந்தலை அன்றில், வக்கா, சாம்பல் நாரை, நீர்க்காம் போன்ற பறவைகள் இக்குளத்தில் பல ஆண்டுகளாக இனப்பெருக்கம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நீர்நிலைகளில் குப்பை கொட்டுதல் மற்றும் மீன்பிடி வலைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, ஒரு கூழைக்கிடா பறவையின் அலகில் பிளாஸ்டிக் பை சிக்கி அலகை திறக்க முடியாமல் இருந்தது மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் பல நீர்க்காகங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழந்ததையும் பார்க்க முடிந்தது. இவ்வாறு தெரிவித்தார்.

x