பட்ஜெட்டில் பிஹாருக்கு ஜாக்பாட்: தேர்தலுக்கான அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!


புதுடெல்லி: பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பிஹாருக்கு அதிகளவில் நலத்திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

பிஹாருக்கு மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக, பட்ஜெட்டில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிஹார் மாநிலத்தின் பாரம்பரிய சேலையை அணிந்து வந்திருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிஹாருக்கான நலத்திட்டங்கள்:

பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் - NIFTEM) அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும். ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிஹாரில் பசுமைவழி விமான நிலையங்கள் அமைக்கப்படும். பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்.

x