சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.475 கோடியில் நடந்துவரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் நடைபெற்று வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கணேசபுரம் மேம்பாலம், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் என ரூ.474.69 கோடியில் 5 திட்டப் பணிகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னிகாபுரம் பகுதியில் ரூ.59.15 கோடியில் தனி கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 3,500 குடியிருப்புகளை சேர்ந்த 80 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் குடிநீர் விநியோக மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இப்பணிகளை தாமதமின்றி உரிய காலத்துக்குள், தரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: நான் சென்னை மேயராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும் இதே வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டியதை பெரிய சாதனையாக கருதுகிறேன்.
வட சென்னை வளர்ச்சி திட்டத்துக்காக சட்டப்பேரவையில் ஏற்கெனவே ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தேன். அதையும் தாண்டி, பல துறைகளின் ஒத்துழைப்போடு ரூ.6,309 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் உள்ள 252-ல் 29 பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. 166 பணிகள் விரைவில் முடிய உள்ளன.
இந்த ஓராண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு துறை அலுவலர்களுக்கும், அவ்வப்போது ஆய்வு செய்யுமாறு துணை முதல்வர், துறை அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளேன். ஓராண்டுக்குள் இது வளர்ந்த சென்னையாக நிச்சயம் உருவாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.
ஆய்வின்போது, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மூர்த்தி, ஆர்.டி.சேகர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ப.ரங்கநாதன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.