தமிழ்நாடு அரசு மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை, 1975ல் துவங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிரந்தரக் கட்டிடங்களுடன் செயல்படும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கான நிரந்தர குடோன்களும் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதற்கான நவீன அரிசி ஆலைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தி வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை பரவலான கொள்முதல் மூலம் இந்திய உணவுக் கழகத்திற்கு ( FCI ) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து கொடுத்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ( NCCF ) மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்திடும் வகையில் நடப்பாண்டில் (2024-25) டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்திட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறோம்.
மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல் கொள்முதல் செய்தால், மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகையும் நிறுத்தி விடுவார்கள். இது விவசாயிகளை பாதிக்கும். மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு முழுக்க, முழுக்க ஒரு கூட்டுறவு நிறுவனமோ, பொதுத்துறை நிறுவனமோ அல்ல. இந்த கூட்டுறவு இணையத்தில் இடைத்தரகர்கள், தனியார் வியாபாரிகள், வாகன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெறும் அமைப்பாகும். கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதி அளிப்பது நாளடைவில் நெல் கொள்முதலை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் முயற்சியாகும்.
எனவே, தமிழக அரசு மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 8ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்குமாறும், பொதுமக்கள் ஆதரவளித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.