குடியரசுத் தலைவர் உரை நாட்டின் முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது: ஜிகே வாசன் பாராட்டு


சென்னை: நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வருங்கால இந்தியாவுக்கும் ஏற்ற உரையாக அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்கு உரியது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு, உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்வது ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளது, விவசாயிகளுக்கு உதவித் தொகையாக 41 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது, 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது, 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்ட செயல்பாடுகள் குடியரசுத் தலைவர் உரையின் மிக முக்கிய அம்சங்களாகும்.

மேலும் குடியரசுத் தலைவரின் உரையானது மத்திய பாஜக அரசு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதை எடுத்துக்காட்டுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் அமர்வின், முதல் நாளில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் இடம் பெற்றிருந்த அனைத்து துறைகளின் முன்னேற்றம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது நன்றிக்கு உரியது.

பட்ஜெட் கூட்டத்தொடரானது ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கான, நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்பதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்வைத்து மக்கள் நலன் காக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் உரையானது பல்வேறு நல்ல அம்சங்கள் சார்ந்த உரையாக அமைந்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

x