1) அமெரிக்காவில் விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து
அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக களத்தில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கன் ஏர்லென்ஸ் நிறுவனத்தில் குறைந்தளவிலான பயணிகள் ஏற்றிச் செல்ல கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் கனட்ஏர் ரீஜினல் ஜெட் 700 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 78 பேர் பயணம் செய்யலாம். இந்த ரக விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விச்சிட்டா நகரில் இருந்து 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன், வாஷிங்டன் அருகே உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை புறப்பட்டது.
வாஷிங்டன் நகரை இரவு 9 மணியளவில் நெருங்கிய விமானம் தரையிறங்குவதற்காக 400 அடி உயரத்தில் தாழ்வாக மணிக்கு 140 மைல் வேகத்தில் பறந்து வந்தது. அந்த விமானம் 33-ம் எண் ஓடுபாதையில் தரையிறங்க விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விர்ஜினியா பகுதியில் உள்ள ஃபோர்ட் பெல்வோயர் ராணுவ தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட யுஎச்-60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் திடீரென குறுக்கிட்டது.
அப்போது விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி, வானில் மிகப் பெரிய தீப்பிளம்பு எழும்பியது. விமானத்தின் பாகங்கள் அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் விழுந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆற்றுக்கு அருகே விழுந்தன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் அமெரிக்க ராணுவத்தினர் 3 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2) ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட் உத்தரவு
புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டியெடுத்து, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3) “என் கோரிக்கையை முதல்வர் நிராகரித்தார்” - ஆளுநர் ஆதங்கம்
“சென்னை - காந்தி மண்டபத்தில் தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை தகுந்த முறையில் நடத்திட முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
4) சீராய்வு மனு தாக்கல் - அமைச்சர் தகவல்
“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
5) ஆர்.பி.உதயகுமார் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்
“மதுரை - திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையை கடக்க முடியாத நிலை காரணமாக, பாலத்துக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்களோடு மக்களாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர். போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6) அகதிகள் முகாம் அடிப்படை வசதிகள் என்னென்ன?
திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில், முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இது இந்த ஆண்டி முதல் கூட்டத் தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதையடுத்து, சனிக்கிழமை வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்தக் கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
8) சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி
சண்டிகரில் வியாழக்கிழமை நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். இது, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணிக்கு 19 கவுன்சிலர்கள் இருந்தனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
9) மகா கும்பமேளாவில் புதிய கட்டுப்பாடுகள்
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விஐபிக்களின் பாஸ்கள் ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநில எல்லைகளில் ‘பார்டர் பாயின்ட்ஸ்’ அமைத்து அங்கேயே திரளும் கூட்டத்தை ஒழுங்கபடுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மகா கும்பமேளா பகுதிக்குக்குள் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. விஐபிக்களின் பாஸ்கள் ரத்து செய்யலாம். பிப்ரவரி 4-ம் தேதி வரை பிரயாக்ராஜ் மாவட்டத்துக்குள் 4 சக்கர வாகனங்கள் உரிய அனுமதியின்றி வருவதை தடுக்கப்படுவது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் குறித்து உத்தர பிரதேச அரசு, உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
10) அண்ணாமலை அதிரடி பேச்சு
மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் டங்ஸ்டன் திட்ட ரத்து பாராட்டு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என்றார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார். தேசியம் வளர்ந்து வருவதால் தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.