மூடுவிழா கண்ட வரி விதிப்பு குறைதீர்ப்பு சிறப்பு முகாம்: திருப்பூர் மாநகர் மக்கள் ஏமாற்றம்


திருப்பூர்: நடப்பு நிதியாண்டு வரி வசூல் பணியில் மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், வரி விதிப்பு தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க சிறப்பு முகாம் கடந்த 3 வாரங்களுக்கு மேல் நடக்கவில்லை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியை காட்டிலும், திருப்பூர் மாநகராட்சியில் வரி விதிப்பு அதிகம் இருப்பதாக பல்வேறு அமைப்பினர் கடந்த 3 மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சொத்து வரி விதிப்பு சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. பொதுமக்கள் கொடுக்கும் சொத்து வரி தொடர்பான புகார் மனுக்கள் மீது 3 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வாரந்தோறும் இந்த முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த சிறப்பு முகாம், ஜனவரி முதல் வாரத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக மாநகர மக்கள் கூறும்போது, “தற்போது நடப்பு நிதியாண்டு வரும் மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், வரி வசூலை காரணங்காட்டி, மாநகராட்சி தரப்பில் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வரி வசூலில் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வாரந்தோறும் வியாழக்கிழமை குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு மேல் முகாம் நடக்கவில்லை.

தற்போது வரி வசூலில் தீவிரம் காட்டுவதால், பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமுக்கு சென்றால், அங்கு முகாமே நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். ஒவ்வொரு மண்டலத்திலும் இருந்து மக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வருகிறார்கள். ஆனால் முகாம் நடைபெறவில்லை என்பதால், அலைக்கழிக்கப்படுகிறார்கள். தற்போது வரிவிதிப்பு சிறப்பு முகாமுக்கு மூடு விழா நடந்துள்ளது. வரி உயர்வு தொடர்பாக அதிருப்தி இருக்கும் நிலையில், இது போன்ற முகாம்களை முன்னறிவிப்பின்றி நிறுத்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் கணேஷை (வருவாய்) அலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து ஊழியர்களும் அதில் கவனம் செலுத்துகின்றனர்.

தற்போது முகாம் இல்லை. வரி விதிப்பு தொடர்பான ஆட்சேபனை மனுக்களை, மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வந்து பொதுமக்கள் இனி அளிக்கலாம். வரி உயர்வை அதிகப்படுத்தினால் தான், மத்திய அரசின் மானியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால், வரி வசூலில் கவனம் செலுத்தப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x