சென்னை: டிசம்பர் 2024ல் வெளியான UDISE அறிக்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 100% பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, நூலக வசதிகள் உள்ளனவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாறாக ஏசர் அறிக்கையின் விவரங்கள் உள்ளன. ஏசர் ( ASER 2024) அறிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் ( PRATHAM) அமைப்பு நேற்று வெளியி ட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் நேரடியாக ஆய்வு செய்ததில் 14.4 % அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லையென்றும், குடிநீர் வசதி செய்யப் பட்டிருந்தும் 7.9 % பள்ளிகளில் அருந்துவதற்குக் குடிநீர் இல்லையென்றும், மொத்தத்தில் 77.7 % பள்ளிகளில் குடிநீர் இல்லையென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2.6% அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லையென்றும், கழிப்பறை இருந்தும் அதைப் பயன்படுத்தப்பட முடியாத நிலை 16% அரசுப் பள்ளிகளில் உள்ளதென்றும், ஒட்டுமொத்தத்தில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகள் 81.4% பள்ளிகளில் மட்டுமே உள்ளனவென்றும் கூறப்பட்டுள்ளது.
8% அரசுப் பள்ளிகளில் பெண்களுக்குத் தனியே கழிப்பறை இல்லையென்றும், தனி கழிப்பறைகள் இருந்த போதிலும் 3% பள்ளிகளில் அவை பூட்டப்பட்டு இருந்ததாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் 11.6% கழிப்பறைகள் இருந்ததாகவும் ஒட்டு மொத்தத்தில் 77.5% கழிப்பறைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கைக் கூறுகிறது.
நூலக வசதி 13.3% அரசுப் பள்ளிகளில் இல்லையென்றும் நூலகம் இருந்தும் 22.4% பள்ளிகளில் நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியவில்ல என்றும், ஒட்டு மொத்தத்தில் 64.3% பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நிலையில் நூலகங்கள் இருக்கின்றனவென்றும் ஏசர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 2024ல் வெளியான UDISE அறிக்கையில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 100% பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, நூலக வசதிகள் உள்ளனவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மாறாக ஏசர் அறிக்கையின் விவரங்கள் உள்ளன.
UDISE அறிக்கை பள்ளி நிர்வாகத்தினர் தாமே போர்ட்டலில் பதிவு செய்யும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. ஆனால், ஏசர் அறிக்கையோ 534 பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஏசர் அறிக்கையின் விவரங்களே ஒப்பீட்டளவில் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை கேட்டுக் கொள்கிறேன்.
ஏசர் அறிக்கையில் கவலை தரும் இன்னொரு தகவலும் உள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர் சேர்க்கை 2022ம் ஆண்டு 75.7% இருந்ததென்றும் அது 2024ம் ஆண்டில் 68.7 % ஆகக் குறைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கரோனா பெருந் தொற்றைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. ஆனால் அது இப்போது சரியத் தொடங்கியுள்ளது.
கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லாவிட்டால் ஏழைப் பெற்றோர் கூட தனியார் பள்ளிகளிலேயே தமது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த எதிர்வரும் நிதி நிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என்று எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஏசர் ( ASER 2024) அறிக்கையை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
— Dr D.Ravikumar (@WriterRavikumar) January 29, 2025
=====
இந்தியாமுழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையை ப்ராதம் ( PRATHAM)… pic.twitter.com/Af6SKaCVqo