உ.பி, உத்தராகண்டை விட கல்வியில் பின்தங்கியுள்ள தமிழகம்: ஓபிஎஸ் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை


சென்னை: 2024ம் ஆண்டிற்கான ஆண்டு கல்வி நிலவர அறிக்கை குறித்த ஆய்வு (Annual Status of Education Report, 2024 Survey) வெளியிடப்பட்டதில் உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை விட தமிழ்நாடு பின் தங்கி உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எண்ணும், எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்குக் கண் போன்றது என்கிறார் திருவள்ளுவர். இதனைக் கருத்தில் கொண்டுதான் கட்டணமில்லாக் கல்வி தமிழகத்தில் அளிக்கப்படுகிறது. பள்ளிக் கல்விக்கு மட்டும் இந்த ஆண்டு 44,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை.

நேற்று முன்தினம், 2024ம் ஆண்டிற்கான ஆண்டு கல்வி நிலவர அறிக்கை குறித்த ஆய்வு (Annual Status of Education Report, 2024 Survey) வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயது வரையிலான 28,984 கிராமப்புற மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 35 விழுக்காடு எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை என்றும், 64 விழுக்காடு ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், 12 விழுக்காடு மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்நாடு பின் தங்கி இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கைபேசி மூலமான, அதாவது ஸ்மார்ட் போன் மூலமான டிஜிட்டல் கல்வியறிவில் தேசிய அளவுக்கு நிகராக தமிழக மாணவ, மாணவியர் இருக்கின்றனர் என்றாலும், கல்விக்காக இதனை பயன்படுத்துவதில் பின் தங்கி இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

இந்த நிலைமைக்குக் காரணம், ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது முறையாக நிரப்பப்படாததும், ஆயிரக் கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்காததும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இவற்றை திமுக அரசு நிறைவேற்றியிருந்தால், தமிழகம் இன்று கல்வியில், வாசிப்புத் தன்மையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்திருக்கும். தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் திமுக அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான்.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக அமர்த்தி, அடுத்த ஆண்டிலாவது கிராமப் புற மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தி. கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

x