வருவாய், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறைகள் சார்பில் ரூ.89.98 கோடியில் கட்டிடங்கள், மீன் இறங்கு தளங்கள் போன்றவற்றை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை சார்பில் ரூ.62.50 கோடி நிதியையும் கோயில் திருப்பணிகளுக்கு வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ.8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் ரூ. 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் மதுரை, நாகப்பட்டினம், கடலூர், தேனி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதேபோல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.58.50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணைகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் என 10 முடிவுற்ற திட்டப் பணிகள், பால்வளத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை கிராமத்தில் ரூ.15. 43 கோடியில் புதிதாக நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். இதுதவிர, திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அறநிலையத் துறை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2024 – 25-ம் நிதியாண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.62.50 கோடி வழங்கும் அடையாளமாக 12 கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளையும் முதல்வர் வழங்கினார்.
நிகழ்வுகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, துறை செயலர்கள் பெ.அமுதா, சத்யபிரத சாஹு, பி.சந்திரமோகன், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாத்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.