ஈசிஆர் சம்பவத்தில் பெண்களின் காரை துரத்தியது ஏன்? - போலீஸார் விளக்கம்; 4 பிரிவுகளில் வழக்கு!


சென்னை: ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வழிமறித்து மிரட்டியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை விரட்டி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இளம் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி பொருத்திய காரில் நான்கு இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோக்கள் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக அந்த 4 இளைஞர்களும் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது புகார் அளித்த பெண்கள் தங்களின் காரை நிறுத்திவிட்டு கழிமுகப் பகுதியில் வேடிக்கை பார்த்து உள்ளனர்.தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய பெண்கள் தங்களின் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பின்னால் நின்றிருந்த இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 2 கார்களில், பெண்கள் வந்த காரை விரட்டி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

x