காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்; புதுச்சேரி திமுக கண்டனம்


புதுச்சேரி: காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு புதுச்சேரி திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கூறியிருப்பதாவது: "காரைக்கால் மீனவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தி படகுடன் 13 பேரை கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காரைக்காலை சேர்ந்த செந்தமிழ், வடிவேல் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்னறர் என்ற செய்தி அதிர்ச்சியை தருகிறது. சிங்கள ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கும், துப்பாக்கி சூட்டுக்கும், கைதுக்கும் புதுச்சேரி மாநில திமுக தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சென்ற மாதம் இலங்கை அதிபர் இந்திய பிரதமரை டெல்லியில் சந்தித்த பிறகு கடந்த 15 நாட்களில் மட்டும் மூன்று முறை 55 தமிழக – புதுச்சேரி மீனவர்கள் கைது செய்யப்பட்ட கொடுமை நடந்தேறி உள்ளது. வழக்கமாக மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து கண்டித்தது என்பதுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மனிதாப நேயத்துடன் நடந்து கொள்ள மத்திய அரசுடன் சேர்ந்து நமது மாநில அமைச்சரும் இலங்கை அரசைக் கெஞ்சி அமைதியாகிவிட்டனர். பகை நாடான பாகிஸ்தான் எல்லையில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்கச் சென்று பிடிபடுபவர்களை கூட இவ்வளவு கொடுமையாக நடத்தப்படுவதில்லை. ஆனால் நமது நிதி உதவியில் உயிர் பிழைத்திருக்கும் இலங்கை அரசு இவ்வளவு அராஜக காரியங்களில் இறங்குவது ஏன் ?.

இந்திய அரசு தமிழர்கள் மீது வைத்துள்ள அலட்சியமும், பழிவாங்கும் எண்ணமுமே காரணம். ஜனநாயக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திவாலான இலங்கை அரசுக்கு தேவையான உதவிகளை செய்து மீட்டெடுத்தது இந்திய அரசு. அவர்களுக்கு சென்ற நிதியில் தமிழக - புதுச்சேரி மக்களின் வரிப் பணமும் உள்ளது என்பதை மறந்து தொடர்ந்து தமிழக -புதுச்சேரி தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவதும், படகுகள் கைப்பற்றப்படுவதுமான ஆத்துமீறல்களை எப்படி அனுமதிப்பது.

இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளான அதானி, அம்பானிகளின் முதலீடுகளுக்கும் தொழிலுக்கும் குந்தகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த அநியாயங்களை மத்திய அரசு அனுமதித்து தனது சொந்த மக்களையே பழிவாங்குகிறது. மத்திய அரசின் இச்செயல் கண்டிக்கத் தக்கதாகும்.

ஆகவே, இனியும் புதுச்சேரி அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. முதல்வர் கடிதம் எழுதுவது தொலைபேசியில் பேசுவதெல்லாம் கண் துடைப்பு. மத்திய அரசின் மெத்தனத்துக்கும், இந்த போக்குக்கும் முதல்வர் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். அலரித் துடிக்கும் காரைக்கால் மீனவப் பெண்களின் கண்ணீருக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்" என்று சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x