சென்னை: இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எஃப்15 மூலம் செலுத்தப்பட்ட என்விஎஸ் - 02 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டின் வெற்றியை உலகமே பாராட்டுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றியில் இது ஓர் அசாத்திய சாதனை. இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து தனது 100 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதே வெற்றியாகும். அதாவது ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் பெரிய ராக்கெட் எஸ்எல்வி-ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளித் துறையில் இஸ்ரோ 100 ராக்கெட்டை ஏவி சதம் அடித்து 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளது.
இஸ்ரோவின் 100வது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட என்விஎஸ்-02 எனும் பெயரிலான 2 செயற்கைக் கோள்கள் தனது புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டிருப்பது இஸ்ரோ வின் வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல். உள் நாட்டிலேயே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அதி நவீன தொழில் நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
என்விஎஸ்-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் இணைந்து காலநிலை, தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் மற்றும் பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும். இந்த செயற்கைக் கோளின் நோக்கம் நேவிகேஷனை துல்லியமாக கொடுப்பதுதான். இந்தியாவை விட்டு 1,500 கி.மீ தொலைவில் நீங்கள் இருந்தால் கூட, எங்கு இருக்கிறீர்கள் என்பதை இந்த செயற்கைக் கோள் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லிவிடும்.
ஏற்கனவே உலக நாடுகள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ வின் சாதனைகளை வியந்து பார்த்த வேளையில் இன்றைய இஸ்ரோ வின் வெற்றியைக் கண்டு உலகமே இந்தியாவை போற்றுகிறது. இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், வெற்றி அடைவதும் இதனால் தாய்நாட்டு மக்களும், தாய்நாடும் பெரும் பயனடைவதும் தொடர்கிறது. குறிப்பாக இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனின் தலைமையில் இந்த வெற்றியானது தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.
இதற்கெல்லாம் காரணம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிவுக்கூர்மையும், கடின உழைப்பும், விடா முயற்சியும், அர்ப்பணிப்பும், திறமையும் தான். மேலும் இந்திய விஞ்ஞானிகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு ஊக்கமளித்து, துணைநிற்பதும் தான். இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டின் வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளையும், அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளையும், பணியாளர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன். இந்திய நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் விஞ்ஞானிகளின் வெற்றிப்பயணம் மேலும் தொடர, சிறக்க, வளர வாழ்த்துகிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.