மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: புதுவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக ஒப்பாரி போராட்டம்


புதுச்சேரி: காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தொடர்பாக இலங்கை அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆரப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்தும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின்னர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அனைவரும் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்து யாழ்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை அரசால் சித்தரவதை செய்யப்படுவதாக தெரிகிறது. காரைக்கால் மீனவர்கள் இலங்கை அரசால் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மறைமுக போர். இலங்கை மீது இந்திய ராணுவம் தகுந்த பதிலடி தர வேண்டும். தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசால் இன்று வரை நிரந்தர தீர்வு காணப் படவில்லை. தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு கடிதம் எழுதினால் மட்டும் உடனடி தீர்வு கிடைத்துவிடாது.

எனவே, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஆளுநர், புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ நேரில் வலியுறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ள இரண்டு மீனவர்களையும் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு கொண்டுவர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறியுள்ளார்.

x