மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மாலையுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு நீர் திறக்கப்படும். மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும்.
இந்நிலையில், கடந்த துண்டு ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், அணையில் 43.17 அடி நீர் மட்டுமே இருந்ததால் உரிய காலத்தில் நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே கேரள, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை முழு கொள்ளளவை (120 அடி) எட்ட இருந்த நிலையில், அணையிலிருந்து 45 நாட்கள் காலதாமதமாக ஜூலை 28-ம் தேதி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாசன தேவையை பொறுத்து அதிகரித்தும், குறைத்தும் நீர் திறக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை, பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு ஆகியவற்றின் காரணமாக, மேட்டூர் அணை கடந்த ஆண்டில் 3 முறை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த சில நாட்களாக, டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்ததன் காரணமாக, அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது விநாடிக்கு 4,000 கன அடியாக திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 184 நாட்களுக்கு பிறகு, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் நேற்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 450 கனஅடியாகவும், நீர் மட்டம் 110.75 அடியாகவும், நீர் இருப்பு 79.47 டிஎம்சியாகவும் இருந்தது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்திய பிறகு, குடிநீர் தேவைக்கு ஏற்ப விநாடிக்கு 500 கனஅடியிலிருந்து அதிகபட்சமாக 2,000 கனஅடி வரை நீர் திறக்கப்படும். கடந்த 184 நாட்களில் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 150.38 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 7.50 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, உபரிநீர் 16 கண் மதகு வழியாக 2 முறை வெளியேற்றப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக வெள்ள உபரிநீர் பேக்கில் 49 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது, என்றனர்.