சென்னை: 21 இட ஒதுக்கீட்டுப் போராளிகளை அங்கீகரித்து பெருமைபடுத்தியது போல் 1978-ல் விழுப்புரம் நகரில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூக நீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு மணிமண்டபம், இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய்த் திட்டம் (304 கோடி) உட்பட சுமார் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டங்களை அறிவித்தார். அவருக்கு விழுப்புரம் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் இட ஒதுக்கீட்டுப் போராளிகளை அங்கீகரித்து பெருமைபடுத்தியதுபோல் 1978-ல் விழுப்புரம் நகரில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூக நீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.