‘வாழ்நாளின் பெருமையான நிகழ்வு’ - 21 சமூக நீதிப் போராளிகள் மணி மண்டபத்தை திறந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!


விழுப்புரம்: வழுதரெட்டியில் 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஆ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைத்த நிகழ்வாகும். 2019 விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார். 21 சமூகநீதி போராளிகள் 1987ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு உருவாக்கப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதா மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது. வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில் தான். தற்போது சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான்.

நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்திற்கான தேவைகளை கண்டறியப்பட்டது. அதன்படி நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம் தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவின தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது தான்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

x