சென்னை அதிமுகவில் மாவட்ட அமைப்பு ரீதியாக கள ஆய்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னை: சென்னையில் அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தல் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும்; புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்துவிட்டதா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கள ஆய்வுக் குழுவினர், சென்னை மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் ஆய்வு செய்து அதன் விபரங்களை தலைமைக்கு சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், வருகின்ற பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று, கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

பிப்ரவரி 4ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலை 10 மணிக்கு வட சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் மாலை 4 மணி வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் செம்மலை மாலை 4 மணி தென் சென்னை தெற்கு (கிழக்கு) ஆய்வு செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் காலை 10 மணி தென் சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் மாலை 4 மணி தென் சென்னை வடக்கு (மேற்கு) ஆய்வு செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாலை 4 மணி தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் ப.மோகன் காலை 10 மணி வட சென்னை தெற்கு (கிழக்கு) மற்றும் மாலை 4 மணி வட சென்னை தெற்கு (மேற்கு) பகுதியில் ஆய்வு செய்கிறார்.

கழக அமைப்பு செயலாளர் கே.சிங்காரம் மாலை 4 மணி சென்னை புறநகர் பகுதியில் ஆய்வு செய்கிறார்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், கள ஆய்வுக் குழுவினர் தங்கள் மாவட்டங்களுக்கு வந்து கள ஆய்வு செய்யும் போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், முன்னாள் மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து உரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.

கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

x