புதுச்சேரி: ஆண்களைப்போல பெண்களையும் பெற்றோராக கருதி எஸ்சி, எஸ்டி சாதி சான்று வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி சென்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பிறந்து வாழ்ந்து வரும் ஆண்களைப் போல பெண்களையும் பெற்றோராக கருதி அவர்களின் பிள்ளைகளுக்கும் பூர்வீக பட்டியலின சான்றிதழ் வழங்க வேண்டும் என்று காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயா என்ற பெண் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பாலின பாகுபாடு பார்க்காமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்தாமல் கடந்த 21 மாதங்கள் கடந்தும் எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் எஸ்சி, எஸ்டி மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினை அரசாணையாக வெளியிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இது சம்மந்தமாக அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, துணை நிலை ஆளுநர் பாலின பாகுபாடு காட்டாமல் காரைக்கால் பெண் வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
புதுச்சேரியில் வாழும் எஸ்சி, எஸ்டி மக்கள் அல்லாத சமூகத்துக்கு 2001ம் ஆண்டை வரையறை செய்து சாதி சான்று வழங்கி வரும் புதுச்சேரி அரசு, புதுச்சேரியில் பிறந்து இங்கேயே 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பட்டியலின மக்களுக்கு 2001ம் ஆண்டை அளவு கோலாக வைத்து பூர்வீக பட்டிலினத்தவர் சாதி சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப் பேரவை நோக்கி பேரணி இன்று நடைபெற்றது. பேரணிக்கு மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.
அமுதவன், தமிழ் மாறன், செல்வநந்தன், அரிமா தமிழன், செந்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சுதேசி மில் அருகில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மிஷன் வீதி ஜென்மராக்கினி கோயில் எதிரே சட்டப்பேரவை அருகில் முடிவடைந்தது. இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.