பிச்சாட்டூர் அணையிலிருந்து சுமார் 2 மாதங்களாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்!


திருவள்ளூர்: நீர் வரத்து குறைவால் சுமார் 2 மாதங்களாக பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீரை இன்று காலை ஆந்திர நீர் வளத்துறையினர் நிறுத்தினர்.

ஆந்திர மாநிலம் நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள இந்த அணைக்கு, வடகிழக்கு பருவ மழையின் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது. ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர நீர் வளத்துறை அதிகாரிகள், பிச்சாட்டூர் அணையிலிருந்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் உபரி நீரை திறந்து வந்தனர்.

தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்டு வந்த அந்த உபரி நீரின் அளவானது அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது. 1.85 டிஎம்சி கொள்ளளவுக் கொண்ட பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், விநாடிக்கு 500 கன அடி என இருந்த உபரி நீர் திறப்பு, 2025ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி விநாடிக்கு 270 கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 100 கன அடியாக குறைந்ததால் கடந்த 15ம் தேதி உபரி நீர் திறப்பு விநாடிக்கு 170 கன அடியாக குறைக்கப்பட்டது.

பிறகு, அந்த அளவு, விநாடிக்கு 70 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், இன்று காலை பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து மிக குறைவாக இருந்தது. ஆகவே, அந்த அணையில் இருந்து சுமார் 2 மாதங்களாக ஆரணியாற்றில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பை ஆந்திர நீர் வளத்துறையினர் நிறுத்தினர்.

x