நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாகத் தொடங்கி, செயல்படுத்த வேண்டும்: ஜிகே வாசன் கோரிக்கை


சென்னை: தமிழக அரசு, நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பாக அறிவித்தபடி பணியை உடனடியாகத் தொடங்கி, காலத்தே முடித்து, செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, நீர்நிலைகளைப் பாதுகாக்க, விவசாய நிலங்கள் பாசன வசதி பெற, நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர பணிகளை முறையே மேற்கொள்ள வேண்டும். அதாவது நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் நந்தன் கால்வாய் திட்டத்தை தொடங்கி, முடிக்க கோரிக்கை வைத்துள்ளது.

தமிழக நீர்வளத்துறையானது உள்நாட்டு நதிநீர் இணைப்பு திட்டமாக – தென்பெண்ணை – பாலாறு – செய்யாற்றில் இணைக்கும் திட்டம் 1 மற்றும் சாத்தனூர் – நந்தன் கால்வாய் இணைக்கும் திட்டம் 2 ஆகிய திட்டங்களுக்கு 2023–24ம் ஆண்டு நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.309.35 கோடி நிதியை நடப்பாண்டில் ஒதுக்கி பணியை தொடங்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியம்.

தென்பெண்னை – பாலாறு – செய்யாறு வழியே இணைக்கும் திட்டத்தினாலும், சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாயில் இணைக்கும் திட்டத்தினாலும் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் பயன் பெறுவார்கள். இத்திட்டத்தினால் சாத்தனூர் அணையிலிருந்து இதுவரையில் பயன் பெறாத திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் 22 ஏரிகளும், 6,800 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

நந்தன் கால்வாயினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட 36 ஏரிகளும், 6654.38 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் நீர்வளத்துறை பட்டியலில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். இப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்கும், விவசாய பெருமக்களின் விளை நிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

எனவே தமிழக அரசானது நீர்வளத்துறையால் அறிவித்தபடி இத்திட்டத்தினை துவக்கி, நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட பாசன கால்வாயாக அறிவித்து, பனமலை ஈசா ஏரியை நீர்த்தேக்கமாக்கி, விவசாயிகள் பெருவாரியாக வாழும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் விடுத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

x