ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: ஓபிஎஸ் கண்டனம்


சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கடல் எல்லைக்குள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி அவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதையும், சிறையில் கொடுமைப்படுத்துவதையும், அவர்களுடைய படகுகள் மற்றும் உபகரணங்களை பிடித்து வைத்துக் கொள்வதையும், அவர்கள் மீது கோடிக் கணக்கில் அபராதம் விதிப்பதையும் இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை அரசின் அராஜகப் போக்கின் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் உரிய அனுமதியுடன் வழக்கம் போல் இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில், தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு விசைப் படகுகளில் சென்றிருந்த 18 மீனவர்கள் மற்றும் நேற்று அதிகாலை ஒரு விசைப் படகில் சென்றிருந்த 15 மீனவர்கள் என மொத்தம் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசின் இதுபோன்ற தொடர் சிறைபிடிப்பு தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தமிழக மீனவர்கள் இடையே ஒருவித அச்சத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்திய மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதரம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், ஒரு பாதுகாப்பற்ற நிலையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதன் மூலம் இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து விடலாம் என்று இலங்கை அரசு கருதுகிறது. இலங்கை அரசின் இந்த அராஜகத்தை ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. இது மட்டுமல்லாமல், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது மிக, மிக அவசியம்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பினையும், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, எவ்வித அச்சமுமின்றி இந்திய மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதோடு, தமிழக அரசும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தத்தைத் தர வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

x