நாமக்கல்: சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள காந்தி சிலைக்கு சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த வளையப்பட்டி அதன் சுற்றுவட்டாரத்தில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குடியரசு தினத்தன்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் வளையப்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் இன்று நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''மோகனூர் தாலுக்காவிற்கு உட்பட்ட வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்றுவட்டாரத்தில் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்த வேண்டாம். நீர் நிலைகளை அழிக்க வேண்டாம். கால்நடை துறைக்கு சொந்தமான நிலங்களை அழிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசிடம் 5,000க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும், 110க்கும் மேற்பட்ட போராட்டங்களும் நடத்தப்பப்பட்டன.
மேலும், 260 நாட்கள் தொடர் காத்திருப்பு பேராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், சிப்காட் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காந்தி சிலைக்கு மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. சிப்காட் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்'' என்றார். குடியரசு தின விழாவில் நடந்த போராட்டத்தால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.