“மதுபான ஆலை அனுமதிக்கு எதிராக புதுச்சேரி அரசு மீது திமுக வழக்கு தொடரும்”


புதுச்சேரி: புதிய மதுபான ஆலை அனுமதிக்கு எதிராக புதுச்சேரி அரசு மீது உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி மற்றும் ஊசுடு தொகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் குருமாம்பேட்டில் நேற்று இரவு நடைபெற்றது. தலைமைக் கழக சொற்பொழிவாளர் கந்திலி கரிகாலன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, தலைமைக் கழக பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தனர்.

இதில் திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசும்போது, புதுச்சேரியில் மக்கள் நலனுக்காக எல்லா பிரச்சனைகளையும் திமுக கையில் எடுத்து போராடி வருகிறது. திமுக தான் இந்த அரசுக்கு கடிவாளமாக இருக்கிறது. புதுச்சேரியில் இரட்டை என்ஜின் பூட்டிய ஆட்சியாக இருந்தாலும் இந்த ஆட்சி டெல்லியில் இருந்து தான் இயக்கப்படுகிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆட்சியில் இருந்தால் போதும் என்று இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அமைச்சர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவை ஆளக் கூடிய மிகப் பெரிய கட்சியான பாஜக தானாக ஆட்சிக்கு வர முடியவில்லை. காங்கிரஸில் இருந்து மூன்று, நான்கு பேரை மிரட்டி இழுத்துச் சென்றார்கள். ஆட்சி அமைப்பதற்கு முன் நியமன உறுப்பினர்களை நியமித்தார்கள். சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று பேரை வைத்து மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டார்கள்.

தற்போது பாஜக எம்எல்ஏக்கள், லாட்டரி அதிபருடன் சேர்ந்து அக்கட்சிக்கு எதிராக பொது மேடையில் விமர்சித்து பேசுகின்றனர். இப்படிபட்ட விரும்பதகாத ஜனநாயகத்தை புதுச்சேரியில் பாஜக அரங்கேற்றி வருகிறது. புதுச்சேரி அரசு போதையில் பயணிக்கிறது. அரசின் கொள்கை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

மது விலக்கில் அரசின் கொள்கை என்ன?. நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் தண்ணீரை மூலதனமாக கொண்டு செயல்படும் எந்தவொரு தொழிற்சாலையும் புதுச்சேரியில் வரக்கூடாது என திமுக ஆட்சியில் அரசாணை கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை மீறி புதிய மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

இவற்றில் திமுக-வின் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேள்வி எழுந்தது. நாங்கள் உறுதியாக சொல்வது மதுபான தொழிற்சாலை புதுச்சேரிக்கு வரக்கூடாது என்பதுதான். அதற்கு காரணம் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி தயார் செய்யப்படும் மதுபானங்களை வேறு மாநிலங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தான்.

அதுவும் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார்கள். ஆளுநர் தமிழகத்தை போல் இல்லாமல் நல்லவராக இருப்பதால் இதற்கு அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பொதுநல வழக்கு தொடரப்படும். புதுச்சேரிக்கு உண்மையாக வருவாய் வேண்டும் என்றால் நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம்” எதிர்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.

x