புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்பதால் திமுக கூட்டணியில் முரண்பாடு வராது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கை நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். விசாரணை சரியாக நடைபெற்றதாக கூறும் தமிழக அரசு, வேங்கைவயல் மக்கள் வெளியே செல்லவோ, வெளியூர் ஆட்கள் ஊருக்குள் செல்லவோ மறுப்பது ஏன்?. அங்குள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
சிபிசிஐடி விசாரணைக்கு எதிராக சிபிஐ விசாரணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது என்பதால், திமுக கூட்டணியில் முரண்பாடு வந்துவிடும் என்று கூறுவது தவறு. பிரச்சினைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. கூட்டணியில் இருப்பாதல் அரசு செய்யக்கூடியதை எல்லாம் ஆதரிக்க வேண்டியதில்லை. அதே வேளையில், சிபிஐ என்பது புனிதமானது என்று எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
தமிழகத்தில் காவல்துறை அவசர நிலையை பிரகடனப்படுத்தியது போல செயல்படுகிறது. காவல் துறை செய்யும் எல்லாவற்றுக்கும் அரசு பொறுப்பு ஏற்க முடியாமா? பெரியாரை விமர்சிக்கும் தகுதி சீமானுக்கு இல்லை” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.