“13 பேருக்கு பத்ம விருதுகள்... தமிழகத்துக்குப் பெருமை!” - ஜி.கே.வாசன் மகிழ்ச்சி


சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லிக்குப்புசாமி, அஸ்வின், அஜித் குமார் உள்பட பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நம் நாட்டின் உயரிய செவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுவது பெருமைக்குரியது. பத்ம விருதுகளில் விதி விலக்கான மற்றும் சிறப்பான சேவைக்காக பத்ம விபூஷண் விருதும், உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக பத்ம பூஷண் விருதும் மற்றும் சிறப்பான சேவைக்காக பத்ம ஸ்ரீ விருதும் அடங்கும்.

குறிப்பாக கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

தொழில் துறையில் சிறந்து விளங்கிய நல்லிக்குப்புசாமி செட்டியாருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித் குமாருக்கும் மற்றும் நடனக் கலைஞர் ஷோபனா சந்திரகுமாருக்கும் பத்ம பூஷண் விருது, இலக்கியம் - கல்வி – இதழியல் துறையில் சிறந்து விளங்கிய தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையருக்கும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும், பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கும் மற்றும் சமையல் கலை வல்லுனர் தாமோதரனுக்கும் பத்ம ஸ்ரீ விருது என தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது. மகிழ்ச்சிக்குரியது.

கடின உழைப்பால், அர்ப்பணிப்பால், திறமையால் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். அதே போல புதுச்சேரியைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணா மூர்த்திக்கு பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது. பத்ம விருதுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 23 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அவரவர் சார்ந்த துறையில் தொடர்ந்து சிறந்து விளங்கி, மேலும் விருதுகள் பெற வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட நாடு முழுவதும் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

x