சென்னை: ”ஆளுநர் மாற்றாதீர்கள்” என உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியது மூலம், நேர்மையான அரசியலால் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை முதல்வர் ஸ்டாலின் நன்கு தெரிந்து இருக்கிறார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சியில் இருக்கின்ற ஒரு கட்சி தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றபோது, தான் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள், மக்களுக்கு ஆற்றிய வளர்ச்சித் திட்டங்கள், நாட்டில் நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு, மக்கள் மீது கூடுதல் வரி விதிக்காதது, மாநில உரிமைகளை நிலைநாட்டியது, நாட்டின் நிதி மேலாண்மை போன்றவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி வெற்றி பெறுவது என்பது நேர்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டு.
சாதனைகளே செய்யாமல், சோதனைகளை மட்டும் மக்களுக்கு அளித்துவிட்டு, உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஆட்சிக் கட்டிலில் அமர நினைப்பது என்பது குறுக்கு வழி அரசியல். இதில், இரண்டாவதைத் தான் திமுக அரசு பின்பற்றப் போவதாக முதல்வர்களே கூறி இருப்பது, திமுக-வின் சாதனைகள் மூலம் வெற்றி பெற முடியாது என்பதைத் தான் உணர்த்துகிறது.
நேற்று முன்தினம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘மேதகு ஆளுநரை மாற்றாதீர்கள்’ என்று பாரதப் பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சரிடத்திலும் வேண்டுகோள் வைப்பதாகவும், அப்பொழுது தான் திமுக-விற்கு ஆதரவு அதிகமாகிறது என்றும் பேசியிருக்கிறார். நேர்மையான அரசியல் மூலம், திமுக-வின் சாதனைகள் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை முதல்வர் நன்கு தெரிந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
முதல்வர் கூற்றிலிருந்து, திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும், மக்கள் மீது தாங்கொண்ணா வரியை திணித்துள்ளது என்பதையும், அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதையும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதையும், போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதையும் முதல்வர் ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்பது தெளிவாகிறது.
ஆனால், உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் கூறி குறுக்கு வழியிலும் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது தான் கள யதார்த்தம். மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும்போது ஒரு நிலைப்பாடு, மத்திய ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு என திமுக-வின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் நன்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக-வின் அவல ஆட்சியை, திமுக-வின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை மறைப்பதற்காக, ஆளுநர் எதைச் சொன்னாலும், அதில் குற்றம் கண்டுபிடித்து அவரை விமர்சிப்பதை திமுக வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள். சமூக நீதிக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். திமுக-விற்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது.
நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னர், மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பார் என்பதற்கேற்ப, 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திமுக ஆட்சியை இழக்கும், எந்த வழியிலும் திமுக வெற்றி பெற முடியாது" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.