சிவகங்கை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்த பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோருக்கும், காரணமாக இருந்த அண்ணாமலை மற்றும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தான் சொன்னதால்தான் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் கருதிக் கொண்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் ஏலம் விடும்போது அவர் எங்கே போனார்?
வேங்கைவயல் விவகாரம் வெளியில் வந்தபோதே சிபிஐ விசாரணை வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், அப்போது ஏன் திருமாவளவன் ஆதரவு தெரிவிக்கவில்லை? உண்மைக் குற்றவாளி யார் என்று அவருக்குத் தெரிந்திருந்தால், நீதிமன்றத்தில் முறையிடலாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சார் யார் என்று கேள்வி எழுப்பி இருந்தேன். தற்போது பல சார்கள் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.