“அமைச்சர் பெற்ற மனுக்கள் குப்பையில் கிடந்தன” - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு


கரூர்: அமைச்சர் பெற்ற மனுக்கள் குப்பையில் கிடந்தன என அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார்.

எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பொதுக்கூட்டம் கரூர் வடிவேல் நகரில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிக தலைமை வகித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு, ஏமூர் ஊராட்சிகள், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடனும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.

4 ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பில் அதிமுக தலைவர்கள் இருந்தனர். மாநகராட்சியுடன் இணைப்பதால் வரி உயரும், 100 நாள் வேலை இருக்காது என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 54 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமியை அமாவாசை என உள்ளூர் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் தான் அமாவாசை, பல கட்சிகள் மாறியவர். முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் பெட்டி வைத்து மனுக்கள் வாங்கினார். இங்குள்ள அமைச்சரும் மனுக்களை வாங்கினார். தற்போது வேறு மாவட்ட அமைச்சர் ஒருவரை அழைத்து வந்து மனுக்களை பெற்றுக் கொண்டு இருக்கிறார். இவர்கள் பெறும் மனுக்கள் குப்பைக்கு தான் செல்கிறது” என்றார்.

குப்பையில் கிடந்த மனுக்கள்: கோதூர் குப்பைக் காட்டில் குப்பையில் கிடந்தது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு அட்டைபெட்டியை காட்டினார். அதில் ஒரு பெரிய உறையில் முப்பெரும் துறை அமைச்சர் என முகவரியில் எழுதியுள்ளது. அதில், தையல் இயந்திரம் கேட்டும், உதவித்தொகை கேட்டும் பல்வேறு மனுக்கள் இருப்பதாகக்கூறி கூட்டத்தில் எடுத்துக்காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் ம.சின்னசாமி, என்.ஆர்.சிவபதி மற்றும் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

x