மதுரை அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா!


மதுரை: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி கிராமத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் ” நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது.

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்களது கோரிக்கையை ஏற்று திட்டத்தை ரத்து செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை(ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது. எனவே, அவர் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x